தமிழ் சினிமா

“என்னுடைய படம் சாதிப் படம் அல்ல… சாதியை எதிர்க்கும் படம்” - மாரி செல்வராஜ் ஆதங்கம்!

ப்ரியா

சென்னை: எனது படம் சாதிப் படமா என்றால் அது உங்களுடைய மொழி. நான் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். அதை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று (அக்.25) சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: “பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளாகவே சொல்கிறேன். ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்பதை இனிமேல் தவிர்த்துவிடுங்கள். அது என்னை மிகவும் பாதிக்கிறது. என்னை மட்டுமின்றி என் வேலையையும் பாதிக்கிறது. உணர்வுபூர்வமாக சொல்கிறேன். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். அன்பு செலுத்துகிறேன். நானும் உங்களை அதே போன்று கேள்வி கேட்கமுடியும். ஆனால் உங்களுக்கும் எனக்கு முரண் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் கூடி வாழ ஆசைப்படக்கூடிய ஆளாக இருக்கிறேன்.

திரும்பவும் அந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டீர்கள் என்றால், நான் இன்னும் அதிகமாக வேலை செய்வேன். ஆனால் உங்களை நிராகரிக்க முயற்சி செய்வேன் என்று நினைக்கிறேன். எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கலையையோ, என்னுடைய அரசியலையோ என்னிடமிருந்து பிடுங்க முயற்சித்தால் நான் மூர்க்கமாக எதிர்த்து போரிடுவேன். அது என்னுடன் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும். எனவே அதுபோன்ற கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.

மாரி செல்வராஜ் படம் என்றால் அப்படித்தான் இருக்கும். மாரி செல்வராஜ் அதற்காக கிளம்பி வந்தவன்தான். மாரி செல்வராஜ் படம் சாதிப் படமா என்றால் அது உங்களுடைய மொழி. மாரி செல்வராஜ் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். அதை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். உங்களை குதூகலப்படுத்தக்கூடிய 300 படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என் ஒருத்தனை விட்டுவிடுங்கள். ஏன் என்னை அந்த கூட்டத்துக்குள் தள்ள முயற்சி செய்கிறீர்கள்?” இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT