பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அவன் இவன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் விஷாலின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது.
மாறுகண் கொண்டவராக அந்தப் படத்தில் நடித்த பிறகு சிலகாலம் உடல்ரீதியாக பல்வேறு சிக்கல்களுக்கு ஆளானார் விஷால். தற்போது அவர் அளித்த நீண்ட பேட்டி ஒன்றில் கூறும்போது, “எவ்வளவு கோடிகள் கிடைத்தாலும் இனிமேல் மாறுகண் வைத்து நடிக்க மாட்டேன். ஒரு மென்டல் மாதிரி பாலா சார் என்ன சொன்னாலும் செய்திருப்பேன்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது இதுதான் நமது கடைசிப் படம், நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என நினைத்தேன். கடுமையான வலியை சந்தித்துவிட்டேன். இப்போது ஏதாவது அடிபட்டாலும் கூட எனக்கு வலி தெரியாது. ‘அவன் இவன்’ படத்துக்கு கிடைத்த பெரிய விருதே பாலா சாரின் பாராட்டுதான்” என்றார்.
ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பது குறித்து விஷால் கூறும்போது, “ஆக்ஷன் ஹீரோ என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பிரிட்ஜில் இருந்து குதிப்பது மாதிரி ஒரு சண்டைக் காட்சி செய்திருப்பார் டாம் க்ரூஸ். அவர்தான் உண்மையான ஆக்ஷன் ஹீரோ. அந்தக் காட்சியினை சரியாக செய்துவிட வேண்டும் என்று 14 டேக்குகள் எடுத்திருக்கிறார்கள். எப்படி அந்த மனுஷன் செய்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும்.
கட்டிடத்தில் இருந்து தாவும் காட்சியில் கால் உடைந்திருக்கும் அப்படியே நடித்திருப்பார். ஒரு ஆண்டு பின்பு சரியாகி தான் அதன் படப்பிடிப்பிலே கலந்துக் கொண்டுள்ளார். டாம் க்ரூஸ் முன்பும், ஜாக்கி சான் முன்பும் ஆக்ஷன் ஹீரோ என்று என்னை சொல்லிக்கொள்ள நான் விரும்பவில்லை. அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நாங்கள் எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தான் ஆக்ஷன் ஹீரோ. நாங்கள் எல்லாம் டூப் தான்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுகள் உட்பட அனைத்து விருதுகளையும் கடுமையாக சாடிய விஷால், “எனக்கு விருதுகள் மீது நம்பிக்கையில்லை. அவை எல்லாம் பைத்தியாகரத்தனம். 4 பேர் உட்கார்ந்துக் கொண்டு, 7 கோடி பேருக்கு பிடித்தப் படம், பிடித்த நடிகர், துணை நடிகர் என்று சொல்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்ன மேதாவிகளா? தேசிய விருதையும் சேர்த்துதான் சொல்கிறேன். அந்த விருதுக்கு கமிட்டி என்று இருக்கிறது.
மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள். அதுவே முக்கியம். 8 பேர் உட்கார்ந்துக் கொண்டு இவர்தான் சிறந்த நடிகர் என்று சொல்வதில் நம்பிக்கையில்லை. எனக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதால் இதனை சொல்லவில்லை.
என்னை விருது வழங்கும் விழாவுக்கு அழைத்தால், அதனை வாங்கிக் கொண்டு போகும்போது குப்பையில் போட்டுவிடுவேன், தப்பாக நினைக்காதீர்கள் என்று சொல்லிவிடுவேன். அந்த விருது தங்கமாக இருந்தால் அதனை அடகு வைத்து வரும் பணத்தை யாருக்காவது கொடுத்துவிடுவேன். என்னை விட சிறந்தவர்களுக்கு கொடுங்கள் என்று சொல்லிவிடுவேன்.
என்னை மாதிரியே மற்றவர்களும் நினைக்கமாட்டார்கள். அவர்களுக்கு அந்த விருது பெறுவது கவுரவமாக இருக்கலாம். ‘சண்டக்கோழி’ மற்றும் ’இரும்புத்திரை’ படங்களுக்கு திரையரங்குகளில் ஓடியதற்காக வழங்கப்பட்ட விருது மட்டுமே என்னிடம் இருக்கிறது. மற்றபடி சமூக சேவைக்காக கொடுக்கப்படும் விருதுகளை வைத்திருக்கிறேன். அது எனக்கு பிடிக்கும்” என்று விஷால் கூறியுள்ளார்.