அனாதையாகிவிட்டதைப் போல உணர்கிறேன் என்று கருணாநிதிக்கு குஷ்பு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
கருணாநிதியின் மறைவு குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “சூரியன் மறைந்து விட்டது. இனி என்றும் உதிக்கப்போவதில்லை. டாக்டர் கலைஞர் கருணாநிதி என்கிற சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொருவரின் மனதிலும், நினைவிலும் செதுக்கப்பட்டிருக்கும் பெயர் இது.
தனது கடைசி மூச்சு வரை மக்களுக்கு சேவை செய்த உயர்ந்த அரசியல் தலைவர் என்ற வரலாறு இந்த பூமியில் இருக்கும் வரை கலைஞர் நினைவில் இருப்பார். டாக்டர் கலைஞர் சாகாவரம் பெற்றவர். உங்களை இழந்துவிட்டேன் அப்பா. அனாதையாகிவிட்டதைப் போல உணர்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.