'ஹெவ் ஓல்டு ஆர் யூ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்க இருக்கிறார் ஜோதிகா.
தமிழ் திரையுலகில் சில ஆண்டுகள் முன்பு புகழின் உச்சத்தில் இருந்து, தனது ஈர்க்கும் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சூர்யா - ஜோதிகாவிற்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
அவ்வப்போது மீண்டும் ஜோதிகா நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வலம் வந்த வண்ணம் இருந்தன. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிந்து மாதவி நடிப்பில் தயாராகி வரும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கோலிவுட்டில் பேச்சுகள் நிலவினாலும் அது நடக்கவில்லை.
இந்நிலையில் தனது கணவர் தொடங்கியுள்ள '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜோதிகா. சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்ற ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை 2டி நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் (Rosshan Andrews) தமிழிலும் இயக்கவுள்ளார். மலையாளத்தின் பிரபல முன்னாள் நடிகை மஞ்சு வாரியர் நீண்ட காலம் கழித்து நடித்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மஞ்சு வாரியர் வேடத்தில் ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், இப்படத்தில் சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தும் கூறுப்பட்டுள்ளது.