‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவின் வழக்கை முன்வைத்து, ‘குட் பேட் அக்லி’ படத்தினை ஓடிடி தளத்திலிருந்து நீக்கியது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நெருக்கடி உருவானது. தற்போது மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தினை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
’குட் பேட் அக்லி’ படத்தில் உபயோகிக்கப்பட்ட இளையராஜா பாடல்கள் அனைத்தையும் படக்குழு நீக்கிவிட்டது. அதற்கு புதிதாக ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையமைத்திருக்கிறார். அர்ஜுன் தாஸ் நடனமாடும் ‘ஒத்த ரூபாயும்’ பாடல் முழுமையாக நீக்கப்பட்டு, அதில் பாடலாக அல்லாமல் புதிதாக பின்னணி இசையாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
‘குட் பேட் அக்லி’ விவகாரம் தொடர்பாக இளையராஜா தரப்பிலிருந்து செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, படக்குழுவினரே பாடலை நீக்கி மீண்டும் படத்தினை பதிவேற்றி இருக்கிறது. இதனால் இந்த சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்பது விரைவில் தெரியவரும்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார்.