தமிழ் சினிமா

இங்கிலாந்தில் இருந்து வந்த மேக்கப் சாதனங்கள்! - சந்திரகுப்த சாணக்கியா (அல்லது) தறுதலை தங்கவேலு

செ. ஏக்நாத்ராஜ்

இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த மன்னர், சந்திரகுப்தர் மவுரியர். இந்தியாவின் முதல் பேரரசர் என்று கணிக்கப்படும் இவர் உருவாக்கிய மவுரிய பேரரசு, பல்வேறு பகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் அடக்கி இருந்தது. சந்திரகுப்தர், அவ்வாறு போரில் வென்றதற்கு, அவருடைய ராஜகுரு, அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியரே காரணம் என்பார்கள். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி உருவான திரைப்படம், ‘சந்திரகுப்த சாணக்கியர்’.

இந்​தப் படத்​தைக் கோவையைச் சேர்ந்த சி.கே.சச்சி இயக்​கி​னார். எழுத்​தாளர் ஆர்​.கே.​நா​ராயணனின் உறவின​ரான இவருடைய இயற்​பெயர் சி.கே.சதாசிவம். அந்த காலத்​திலேயே சட்​டம் படித்​திருந்த இவர், சினிமா ஆர்​வத்​தால், லண்​டனில் திரைப்பட இயக்​கம் குறித்து கற்​று​விட்​டு, எல்​லீஸ்ஆர்​.டங்​க​னின் ‘சதிலீலா​வ​தி’​யில் பணிபுரிந்​தார். பின்​னர் அவர் இயக்​கிய படம், ‘சந்​திரகுப்த சாணக்​கியர்’.

இதில், பவானி கே.​சாம்​பமூர்த்​தி, என்​.சி.வசந்​தகோகிலம், பிரு​க​தாம்​பாள், டி.கே. கல்​யாணம், பசுபுலேட்டி னி​வாசுலு நாயுடு, பி.​சா​ர​தாம்​பாள் என பலர் நடித்​தனர். அந்த காலத்​தில் பிரபல கர்​னாடக இசைப் பாடகி​யாக இருந்த வசந்த கோகிலம் நடித்த முதல் படம் இது. எம்​.எஸ்​. சுப்​புலட்​சுமிக்கு இணை​யாக வரக்​கூடிய​வர் என எதிர்​பார்க்​கப்​பட்ட வசந்​தகோகிலம், சில படங்​களு​டன் நடிப்பை நிறுத்​தி​விட்​டார்.

அப்​போது பிரபலபல​மாக இருந்த நகைச்​சுவை நடிக​ரான எஸ்​.எஸ். கோக்கோ என்ற பசுபுலேட்டி னி​வாசுலு நாயுடு, சர்க்​கஸில் பயிற்​சிப் பெற்​றவர். அவர் படங்​களில் தனது செய்​கை​களின் மூலம் ரசிகர்​களைக் கவர்ந்​தார். அவருடைய பிரபல​மான செயல்​களில் ஒன்​று, சிகரெட்டை தூக்​கிப் போட்​டுப் பிடிப்​பது. இந்த ஸ்டைல் அப்​போது அதி​கம் ரசிக்​கப்​பட்​டது. துர​திர்​ஷ்ட​வச​மாக, அவருக்கு அதிக வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. இளம் வயதிலேயே தற்​கொலை செய்து கொண்​டார்.

இது வரலாற்​றுப் படம் என்​ப​தால், படத்​துக்​கான மேக்​கப் சாதனங்​கள், மற்​றும் நகைகள் இங்​கிலாந்​தில் இருந்து கொண்டு வரப்​பட்​டன. ரசிகர்​களிடம் ஆச்​சரிய​மாகப் பேசப்​பட்ட இந்த விஷயம், அந்த கால​கட்​டத்​தில் பத்​திரி​கை​களில் செய்​தி​யாக வெளி​யா​யின. பாப​நாசம் சிவன் இசையமைத்​தார். தங்​களுக்​கான பாடல்​களை, இளவரசி சாயா​வாக நடித்த வசந்த கோகில​மும் சந்​திரகுப்​த​ராக நடித்த பவானி கே.​சாம்​பமூர்த்​தி​யும் பாடினர்.

எஸ்​.​தாஸ் ஒளிப்​ப​திவு செய்த இந்​தப் படம் 1940-ம் வருடம் ஆக.24-ம் தேதி வெளி​யானது. அந்​தக் கால​கட்​டத்​தில் சில படங்​களுக்கு இரண்டு தலைப்​பு​கள் வைப்​பது பேஷ​னாக இருந்​தது. அதே போல இந்​தப் படத்​துக்​குச் சந்​திரகுப்த சாணக்​கியா (அல்​லது) தறு​தலை தங்​கவேலு என்று தலைப்பு வைத்​திருந்​தனர். ஆனால் பெரும் பொருட்​செல​வில் உரு​வான இந்​தப் படம் பெரிய வெற்​றியைப்​ பெற​வில்​லை என்​பது சோகம்!

SCROLL FOR NEXT