தமிழ் சினிமா

‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ? - வைரல் போஸ்டரும் பின்னணியும்!

ப்ரியா

சென்னை: ‘கூலி’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்று நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் ‘கூலி’ படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வாயில் பைப் உடன் புகைத்தபடி சிவகார்த்திகேயனின் புகைப்படமும் இடம்பெற்றது. இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வந்தனர். இன்னும் சிலர் சன் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் சென்று இது உண்மையா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் இது ஒரு ஃபேன் மேட் போஸ்டர் என்றும் சிவகார்த்திகேயன் ‘கூலி’ படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, ரஜினியிடம் லோகேஷ் கனகராஜ் முதலில் கூறிய ஃபேண்டஸி கதையில் அப்படி ஒரு கதாபாத்திரம் வைக்கப்பட இருந்ததாகவும், ஆனால் பின்னர் கதை மாற்றப்பட்டு விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT