தமிழ் சினிமா

‘பார்க்கிங்’ படத்துக்கு 3 தேசிய விருதுகள் - சிறந்த உறுதுணை நடிகராக எம்.எஸ்.பாஸ்கர் தேர்வு!

அனலி

புதுடெல்லி: 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 விருதுகள் தட்டிய பார்க்கிங் - ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பார்க்கிங்’ போன்ற சாதாரண பிரச்சினைகள்தான் மனித மனங்களின் அடி ஆழத்தில் இருக்கும் அகம்பாவத்தையும் சிறுமைகளையும் கீழ்மைகளையும் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக வெளிப்பட வைக்கின்றன என்பதைக் கச்சிதமாக உணர்த்தியிருப்பார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது, இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் வென்றுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ படத்துக்காக அவருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார்.

சிறந்த கலை / பண்பாட்டு திரைப்படத்துக்கான தேசிய விருதை கமக்யா நாரயண் சிங் இயக்கிய ‘டைம்லெஸ் தமிழ்நாடு’ (Timeless Tamil Nadu) என்ற படம் வென்றுள்ளது. புனைவு அல்லாத திரைப்படங்கள் (Non-Feature Films) பிரிவில் தமிழ் ஆவணப்படமான ‘லிட்டில் விங்ஸ்’ சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சரவணமருது இந்த விருதை வென்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மலையாள திரைப்படமாக ‘உள்ளொழுக்கு’ அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த உறுதுணை துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒலி அமைப்புக்கான தேசிய விருது ‘அனிமல்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தயாரிப்புக்கான தேசிய விருதை மலையாளப் படமான ‘2018’வென்றுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படத்துக்கான விருதை ‘பஹவந்த் கேசரி’ வென்றுள்ளது.

SCROLL FOR NEXT