அரசியலுக்கு வந்திருந்தால் முதலமைச்சாராகி இருப்பேன் என்று பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.
பாரதிராஜா இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘ஓம்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் முன்னோட்டத்தை நாளை இயக்குநர் அமீர் வெளியிட இயக்குநர் ராம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்கள்.
’ஓம்’ படத்தை விளம்பரப்படுத்த பாரதிராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அவசியமிருந்தால் 50 ஆண்டுக்கு முன்பே அரசியலுக்கு வந்து இந்நேரம் முதலமைச்சராகியிருப்பேன். முன்பே அரசியல் ஆரம்பித்து இருந்தால், இந்நேரம் நான் தான் முதலமைச்சர். அனைவருமே தொடர்ந்து என்னை வற்புறுத்தி வருகிறார்கள். கடந்த மாதம் கூட மிகப்பெரிய அரசியல் கட்சித் தலைவர் அழைத்தார். பெரிய பதவியெல்லாம் தருகிறோம் என்று அழைத்தும் கூட நான் போகவில்லை.
என் மறைவின் போது மிகப்பெரிய கலைஞன் மறைந்துவிட்டான் என்று தான் இருக்க வேண்டும். மிகப்பெரிய அரசியல்வாதி என்று இருக்கக் கூடாது. என் உடம்பு நல்ல கலைஞனாக மட்டுமே போக வேண்டும், அரசியல்வாதியாக போகக் கூடாது.
உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே ஒன்று பேசத் தெரியாது. அரசியல்வாதிக்கு சாணக்கியத்தனம், தந்திரங்கள் வேண்டும். அதெல்லாம் என்னிடமில்லை. ஆகையால் என்னால் அரசியல்வாதியாக முடியாது.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி