தமிழ் சினிமா

அஜித்தை இயக்க பேச்சுவார்த்தை: உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்

ஸ்டார்க்கர்

அஜித்தை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினி, கமல், விஜய் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். அஜித்துடன் எப்போது பணிபுரிவார் என்ற கேள்வி எழுந்துக் கொண்டே இருந்தது. தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அஜித் படம் இயக்குவது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “அஜித் உடன் பணிபுரிய இப்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அவருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அஜித் சாரை எனது ஆக்‌ஷன் காட்சிகளின் பக்கம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கான கதையும் ஒரு 10 மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தோம்.

இப்போது கார் ரேஸ் என்று பிஸியாக இருக்கிறார். நானும் அடுத்டுத்த படங்களில் பிஸியாக இருக்கிறேன். அனைத்து கைக்கூடி வரும் சமயத்தில் அவரையும் இயக்குவேன். அஜித் சாரையும் இயக்கினால் மட்டுமே, அனைத்து நடிகர்களுடன் நான் பணிபுரிந்தது முழுமையடையும். அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலமாக பேசிக் கொண்டிருக்கிறோம். இருவருடைய நேரமும் கைகூடி வரும் போது 100% படம் பண்ணுவேன். ஆனால் எப்போது என்பது தெரியாது” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

SCROLL FOR NEXT