தமிழ் சினிமா

சாய் அபயங்கர் மீதான ‘ட்ரோல்’ தாக்குதல்கள் உணர்த்துவது என்ன? - ஒரு பார்வை

டெக்ஸ்டர்

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சினிமா தொடர்பான பக்கங்களில் அதிகம் இடம்பெறும் பெயர்... சாய் அபயங்கர். ஒருபக்கம் இவரது பாடல்கள், முன்னணி இயக்குநர்கள் - நடிகர்களின் படங்களுக்கு ஒப்பந்தம் ஆவது குறித்த செய்திகள் என்றால், இன்னொரு பக்கம் இவர் தொடர்பான ட்ரோல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் சினிமாவின் பிரபல பாடகர்களான திப்பு - ஹரிணி தம்பதியரின் மகன்தான் சாய் அபயங்கர். சிறுவயது முதலே இசையில் ஆர்வம் மிகுந்த சாய் அபயங்கர், தபேலா, கிடார், டிரம்ஸ் போன்ற இசைக் கருவிகளை கற்றவர். கூடவே குரல் பயிற்சியும் மேற்கொண்ட அவர், 13 வயதிலேயே இசையமைக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைத்து 2022-ஆம் ஆண்டு வெளியான ‘வலம் வரவேண்டும்’ என்ற பாடலை சாய் அபயங்கர் எழுதி, பாடியிருந்தார். ஆனால், அந்தப் பாடல் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. கரோனா காலகட்டத்தில் தன் நண்பர் ஆதேஷ் கிருஷ்ணா உடன் சேர்ந்து தான் உருவாக்கிய ஒரு பாடலுடன் திங்க் மியூசிக் நிறுவனத்தை அணுகினார் சாய் அபயங்கர். அந்தப் பாடல்தான் இணையத்தில் படு வைரலான ‘கட்சி சேர’ பாடலாக உருவெடுத்தது.

இந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்காத ‘ரீல்ஸ்’ வீடியோக்களே இல்லை என்னும் அளவுக்கு ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து சாய் தனது அடுத்த சுயாதீன பாடலான ‘ஆச கூட’ பாடலை ரிலீஸ் செய்தார். அதுவும் இணையத்தில் பயங்கர வைரலானது. இந்தப் பாடலை சாய் அபயங்கரின் சகோதரி சாய் ஸ்மிருதி பாடியிருந்தார். பாடல் வெளியான பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு சாய் அபயங்கருக்கு தேடி வந்தது.

பலர் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர். புதன்கிழமை அன்று வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தன் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தி இருக்கிறார். அதில் சாய் அபயங்கர் கூறுகையில், “கட்சி சேர பாடலுக்குப் பிறகு ’பென்ஸ்’ படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது நான் பெரிய படங்களில் பணியாற்றி வருகிறேன். எனக்கு வரும் வாய்ப்புகள் குறித்து ஆடியன்ஸே இவ்வளவு யோசிக்கும்போது, தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எவ்வளவு யோசித்திருப்பார்கள்?!

சினிமா துறையில் கிட்டத்தட்ட எல்லாருமே எல்லாருக்கும் தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். என்னுடைய இசை, நான் வேலை செய்யும் பாணி ஆகியவை பற்றி அவர்கள் ஒரு பத்து பேரிடம் சொல்வது மூலம்தான் எனக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இது கடவுளின் திட்டம் என்றும் நான் நம்புகிறேன். மேலும், நான் முன்பே ஒப்பந்தமான பல படங்கள் தற்போது அறிவிக்கப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

என்னதான் நெபோடிசம், பெரிய தொடர்புகள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், எந்த துறையிலும் திறமை இருந்தால் மட்டுமே ஒருவரால் நீடிக்க முடியும். திரைத் துறையிலேயே கூட அதற்கான உதாரணங்களை நாம் இப்போதும் பார்க்கலாம். அதற்கு சாய் அபயங்கரும் விதிவிலக்கு அல்ல.

SCROLL FOR NEXT