விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘லவ் மேரேஜ்’. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரபு உடன் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - 30+ வயது நாயகனான விக்ரம் பிரபுவுக்கு பல வருடங்களாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறது அவரது குடும்பம். வரும் ஒவ்வொரு வரனும் ஏதேனும் காரணம் சொல்லி கைவிட்டுச் செல்கிறது. நாயகனும் அவர் குடும்பமும் இதனால் எதிர்கொள்ளும் இன்னல்களை நகைச்சுவையாக ட்ரெய்லரில் காட்டியுள்ளது படக்குழு.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெயினர் படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழலில், சமூக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அழுத்தத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். மேலும், அதை முடிந்தளவு காமெடியாகவே சொல்லி இருப்பார் என்பதை ட்ரெய்லரின் மூலம் யூகிக்க முடிகிறது. சரியான திரைக்கதையும், நல்ல நகைச்சுவைகளும் இடம்பெற்று விட்டால், இந்த ஆண்டின் சிறந்த ஃபீல் குட் படங்களின் வரிசையில் இடம்பிடிக்கலாம். ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர் வீடியோ: