தமிழ் சினிமா

‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், 'பேரன்பும் பெருங்கோபமும்'. இதில், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். சிவபிரகாஷ் இயக்கியுள்ளார். கடந்த 5-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் பகல்காட்சியும் மாலை காட்சியும் கிடைத்தால் மக்களைச் சென்றடையும் என்று தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "தமிழக அரசியலில் மாற்றத்துக்கான கட்சிகளாக இருக்கக் கூடிய, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்தப் படத்தை திரையரங்கில் போய் பாருங்கள் என்று அவர்கள் கட்சிக்காரர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு கொள்கைகளையுடைய மூன்று தலைவர்கள் இந்தப் படத்தைப் பாராட்டி பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். இது வேறு எந்த படத்துக்கும் அமையவில்லை. இது சாதீய தீண்டாமை குறித்து பேசும் முக்கியமான படம். இந்தப் படம் ஏன் ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெறுவதுதான் சமூக முன்னேற்றத்துக்கான அடுத்தக் கட்ட நகர்வாக இருக்கும்.

மக்கள் இதை கைவிடவில்லை. ஆனால், அவர் களைச் சென்றடைவதற்குப் இந்தப்படத்துக்கு மாலை காட்சியும் பகல் காட்சியும் திரையரங்குகளில் கிடைத்தால் அது மக்களைச் சென்றடையும். அப்படிச் சென்றால் சமூகத்துக்கான வெற்றியை அது ஈட்டித் தரும்" என்று தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT