தமிழ் சினிமா

திரை விமர்சனம்: கடைக்குட்டி சிங்கம்

செய்திப்பிரிவு

ஊரே மதிக்கும் பெரிய மனிதர் சத்யராஜ். அவரது முதல் மனைவி விஜி சந்திரசேகருக்கு 4 பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லாததால் மனைவியின் சம்மதத்துடன் மச்சினி பானுபிரியாவை 2-வது திருமணம் செய்கிறார். அதற்கு பிறகு முதல் மனைவிக்கு ஆண் குழந்தையாக, கடைக்குட்டி வாரிசாகப் பிறப்பதுதான் கார்த்தி. அவருக்கு பிரியா பவானி சங்கர், அர்த்தனா பினு என 2 முறைப்பெண்கள். கூட்டுக் குடும்பத்தில் ஆளாளுக்கு பிரச்சினையைக் கிளப்ப அனைவரையும் பொறுமையாக சமாளிக்கிறார் கார்த்தி. முறைப்பெண்களில் ஒருவரைத்தான் கார்த்தி திருமணம் செய்வார் என குடும்பமே காத்திருக்க, சாயிஷா சைகலை காதலிக்கிறார். இதற்கிடையில், ஊரில் சாதி அரசியல் செய்யும் வில்லனாக வலம் வருகிறார் சாயிஷாவின் முறை(க்கும்) மாமன் ஷத்ரு. அவருடனான மோதல், 5 சகோதரிகள், பங்காளி சண்டை இவற்றை எல்லாம் சமாளித்து கடைசியில் காதலியை கார்த்தி கரம் பிடிக்கிறாரா என்பதை காதல், மோதல், சோகம் என உணர்ச்சிகளின் கலவையாகக் காட்டி இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

சொந்தபந்த உறவுகளின் சந்தோஷம், எதிர்பார்ப்பை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது படம். ஒரு பெரிய குடும்பத்துக்குள் பிரச்சினைகள் எப்படியெல்லாம் வெடிக்கும், அதை எப்படி சமாளிப்பது என்பது அழகாக கையாளப்பட்டிருக்கிறது. உறவுகளின் உன்னதம் பேசும் படைப்புக்குள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்து வைத்திருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.  

விறுவிறுப்பான ரேக்ளா பந்தயத்தோடு தொடங்கும் படம் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. படம் முழுக்க விவசாயிகள் பற்றி ஆங்காங்கே மழைச் சாரலாக சில நல்ல கருத்துகளை பதிவு செய்துள்ளனர். வசனத்தில் காட்டிய அளவுக்கு, விவசாயிகள் எதிர்கொள்ளும் ஜீவாதாரப் பிரச்சினைகளை காட்சிகளில் காட்டவில்லை.

விவசாயி கதாபாத்திரத்தில் கார்த்தி கச்சிதமாக பொருந்துகிறார். கிராமத்துக் களத்தில் இதற்கு முன்பும் மிடுக்கான சில கதாபாத்திரங்களை கார்த்தி ஏற்றிருந்தாலும், இதில் விவசாயியாக தனித்து நிற்கிறார். காதல் விஷயம் அப்பாவுக்கு தெரிய வேண்டும் என்பது தொடங்கி கல்லூரி நிகழ்ச்சியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பேசுவது, குடும்ப உறவுகள் தன்னால் பிரிந்துவிடக்கூடாது என்று தவிப்பது என இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

குடும்பத்தில் எல்லோருடனும் சேர்ந்து ‘குரூப் போட்டோ’ எடுப்பதையே தனது பெரிய கனவாக நினைக்கும் சத்யராஜ், படத்தில் ஒவ்வொரு இடத்திலும் மனதை நிறைக்கிறார்.

காதல் காட்சிகளுக்கு மட்டுமேதான் நாயகி என்றாலும், கிராமத்துப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார் சாயிஷா சைகல்.

தாய்மாமனை திருமணம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று தவிக்கும் இடங்களில் பிரியா பவானி சங்கர் அசத்துகிறார். 3-வது நாயகி அர்த்தனா பினுவின் பங்களிப்பு சிறிதானாலும் குறையின்றி செய்திருக்கிறார். கார்த்தி - அக்கா மகன் சூரியின் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், அத்தனை பேரும் தமது பங்கை சிறப்பாக அளித்திருக்கின்றனர்.

கதாபாத்திரங்களுக்கு பெருநாழி குணசிங்கம், ரணசிங்கம், கண்ணுக்கினியாள், ஆண்டாள், பூம்பொழில் செல்லம்மா, சிவகாமியின் செல்வன், அங்கயற்கண்ணி என பெயர் சூட்டியதிலும், வசனங்களிலும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் பாண்டிராஜ். ‘‘சொத்து சேக்குறது பெரிசில்ல. சொந்தத்த சேக்குறதுதான் பெரிசு’’, ‘‘பத்திரிகைல டாக்டரு, இன்ஜினீயருன்னு போட்டுருக்க.. என்னை விவசாயின்னு போட மாட்டியா’’ என பல இடங்களில் வசனங்கள் பளிச்சிடுகின்றன.

உயிராக நேசிக்கும் காதலியை கைப்பிடிப்பதற்காக, உறவுகள் கைவிட்டுப் போய்விடக் கூடாது என மெனக்கெடும் நடிப்பில் கார்த்தி பிரமாதப்படுத்துகிறார்.

கலை இயக்குநர் வீரசமர் அசத்தியிருக்கிறார். இமானின் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்டும் கிராமத்தின் பசுமை... குளுமை!

வீட்டுக்கு வருபவர்களுக்கு மரக்கன்று அன்பளிப்பது, சூரியும், கார்த்தியும் பேருந்தில் ஏறிய பிறகு வண்டிக் காளைகள் பின்தொடரும் நேசம், எதிராளி செய்த குற்றத்துக்கு தண்டனையாக கருவேல மரங்களைப் பிடுங்கும் தண்டனை என்று காட்சிக்கு காட்சி சிறப்பு கூடுகிறது. படத்தில் ஒரே பலவீனம் வில்லன் கொடியரசுவாக வரும் ஷத்ரு பகுதி. ஒரு கூட்டுக் குடும்பம் என்றால் அதை பிரிப்பதற்கு ஒரு வில்லன் வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்ட காட்சிகளாக வெளிப்படுகின்றன. கார்த்தி குடும்பத்தை, காதலைப் பிரிக்க அவர் முன்வைக்கும் திட்டங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இதையும் மீறி, உறவுகளின் எதார்த்தமான பாசம், கோபம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து உள்ளம் நிறைகிறான் ‘கடைக்குட்டி சிங்கம்’.

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

SCROLL FOR NEXT