தமிழ் சினிமா

“கமல் மன்னிப்புக் கேட்டாலும் கூட...” - விடாமல் பிடிவாதம் காட்டும் கர்நாடக திரைப்பட சம்மேளனம்!

ப்ரியா

பெங்களூரு: திரையரங்குகளும் விநியோகஸ்தர்களும் ஏற்கெனவே ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட சம்மேளனம் மீண்டும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கர்நாடக திரைப்பட சம்மேளனத்தின் தலைவர் நரசிம்மலு கூறும்போது, “‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று கமல்ஹாசன் உறுதியாக கூறுகிறார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது கருத்தை கண்டித்துள்ளனர். திரையரங்குகளும் விநியோகஸ்தர்களும் ஏற்கனவே தக் லைஃப் படத்தைத் திரையிடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டனர். அவர் மன்னிப்பு கேட்டாலும், உடனடியாக அதை வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று நரசிம்மலு தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கமல்​ஹாசன் தனது தயாரிப்பு நிறு​வன​மான ராஜ்கமல் ஃபிலிம் இன்​டர்​நேஷனல் சார்​பில் கர்​நாடக உயர் ​நீ​தி​மன்​றத்​தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்​கல் செய்​தார். அதில், “கர்​நாட​கா​வில் தக் லைஃப் படத்​தைத் திரை​யிட தடை விதித்​திருப்​பது சட்​டத்​துக்கு எதி​ரானது. எனவே, தடையை நீக்​கி, திரை​யிட அனு​ம​திக்க வேண்​டும். திரையரங்​கங்​களுக்கு போதிய போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு கர்​நாடக அரசுக்​கும், போலீஸுக்​கும்​ உரிய வழி​காட்​டு​தல்​களை வழங்க வேண்​டும்” என முறை​யிட்​டுள்​ளார். இந்த மனு இன்று விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ''கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்‌ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க‌க் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT