தமிழ் சினிமா

‘முள்ளும் மலரும்’ முதல் ‘அவர்கள்’ வரை - கமலுக்குப் பிடித்த ரஜினி படங்கள்

ப்ரியா

சென்னை: தனக்குப் பிடித்த ரஜினி படங்களை நடிகர் கமல்ஹாசன் பட்டியலிட்டுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசனிடம் அவருக்குப் பிடித்த ரஜினி படங்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர் “எனக்கு பிடித்தது ‘முள்ளும் மலரும்’ படம்தான். ஆனாலும் நானும் ரஜினியும் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தது இதுதான். இனிமேல் ’முள்ளும் மலரும்’ போன்ற படங்களை எல்லாம் நீங்கள் செய்து கொள்ளுங்கள், நான் ‘பாட்ஷா’ போன்ற படங்களே செய்து கொள்கிறேன் என்று அவர் என்னிடம் சொல்லிவிட்டார். நாங்கள் அப்போதே எல்லாவற்றையும் முயற்சி செய்துவிட்டோம். எனக்கு ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் பிடிக்கும்.

கதவை மிதித்துக் கொண்டு வரும் ‘அபூர்வ ராகங்கள்’ ரஜினியும் பிடிக்கும். அதில் அவர் வில்லன் அல்ல. நான் தான் வில்லன். அவர்களுடைய காதலுக்கு இடைஞ்சலாக இருக்கும் அரைவேக்காட்டு காதலன் நான் தான். எனக்கு அந்த மாதிரி படங்கள்தான் பிடிக்கும். ‘அவர்கள்’ படத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் ரஜினி. ‘தப்பு தாளங்கள்’ கூட. பாலச்சந்தர் படமாக சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நல்ல படங்களாக சொல்கிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

SCROLL FOR NEXT