தமிழ் சினிமா

அடுத்த ஆண்டு ‘வடசென்னை 2’ - ‘குபேரா’ படவிழாவில் தனுஷ் உறுதி!

ப்ரியா

கண்டிப்பாக அடுத்த ஆண்டு ‘வடசென்னை 2’ உருவாகும் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘வடசென்னை’. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்துக்கான குறிப்புடன் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதன்பிறகு தனுஷ், வெற்றிமாறன் இருவருமே வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் இரண்டாம் பாகம் தொடங்கப்படவில்லை. இருவருமே இணைந்து ‘அசுரன்’ படத்தை கொடுத்தபிறகும் கூட ‘வடசென்னை’ பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ரசிகர்கள் பலரும் தொடர்ச்சியாக வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரிடம் ‘வடசென்னை 2’ எப்போது என கேள்வி எழுப்பி வந்தனர். இப்படத்தின் காட்சிகள் இப்போதும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 01) சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷிடம் ‘வடசென்னை 2’ எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தனுஷ் ‘நீங்களும் 2018 முதல் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக அடுத்த ஆண்டு ‘வடசென்னை 2’ உருவாகும்’ என்று கூறினார். இது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT