தமிழ் சினிமா

‘இளையராஜா இசைத்த ‘பிதாமகன்’ படத்தில் எம்எஸ்வி பாடல் இருந்ததால்...’ - கங்கை அமரனுக்கு தயாரிப்பாளர் தேனப்பன் பதில்

ஸ்டார்க்கர்

‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘ஒத்த ரூபாய் தர்றேன்’ பாடலை உபயோகப்படுத்தி இருந்தது படக்குழு. இதற்காக படக்குழுவினரிடம் விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இசை வெளியீட்டு விழா ஒன்றில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை கடுமையாக சாடி பேசினார் கங்கை அமரன். அவருடைய பாடல்களை விட எங்களுடைய பாடலை உபயோகப்படுத்துகிறார். அவருக்கு வேலை தெரியாது என்றெல்லாம் குறிப்பிட்டார் கங்கை அமரன்.

இந்த விவகாரம் தொடர்பாக ‘13/13 லக்கி நன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் தயாரிப்பாளர் தேனப்பன். பாடல் விவகாரம் தொடர்பாக தேனப்பன், “இசை வெளியீட்டு விழா ஒன்றில் கங்கை அமரன் பேசியதைக் கேட்டேன். அவருக்கு ஜி.வி.பிரகாஷ் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. 7 கோடி சம்பளம் வாங்குகிறார், ஆனால் ராஜா அண்ணா பாட்டைப் போட்டுள்ளார். அவருக்கு வேலை தெரியவில்லை என்பது போல் பேசியிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் தங்கமான மனிதர். அவர் 7 கோடி வாங்குவது இவருக்கு வயிற்றெரிச்சலா என்று தெரியவில்லை. பலமுறை தன்னுடைய பட வெளியீட்டுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ படத்தில் பாடலை பயன்படுத்தியது அவருடைய தவறு அல்ல. அது இயக்குநரின் விருப்பம்.

இளையராஜா இசையமைத்த ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரன் ஆடும் காட்சியில் எம்.எஸ்.வி அவர்களது பாடலை பயன்படுத்தி இருப்பார்கள். அதற்காக இளையராஜாவுக்கு வேலை தெரியாது என்று சொல்ல முடியுமா?” என்று குறிப்பிட்டார் தேனப்பன்.

அவரைத் தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர், “தயாரிப்பாளர் தேனப்பன் இங்கு சில விஷயங்கள் பேசினார். அந்த விவகாரத்தில் நண்பர் கங்கை அமரன்தான் ஆவேசமாக பேட்டிக் கொடுத்தார். அந்த க்ளைமாக்ஸில் ஒன்று நடந்தது. கங்கை அமரன் பேட்டியை பார்த்துவிட்டு இளையராஜா ‘முதலில் இவன் மீது வழக்கு போட வேண்டும்’ என்றாராம். சினிமாவில் நடக்கும் சண்டைகள் நிரந்தரமானவை அல்ல” என்று குறிப்பிட்டார் எஸ்.வி.சேகர்.

SCROLL FOR NEXT