தமிழ் சினிமா

‘96 பார்ட் 2’ அப்டேட்: ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம்

ப்ரியா

‘96 பார்ட் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள்.

தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விலகினார். தற்போது ‘96’ 2-ம் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதை சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் உறுதிப்படுத்தி இருக்கிறார் பி.சி.ஸ்ரீராம்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தின் முடிவில் இருந்தே, 2-ம் பாகத்துக்கான கதையினை எழுதியிருக்கிறார் பிரேம்குமார்.

SCROLL FOR NEXT