தமிழ் சினிமா

விஜய் உடன் இணைய முடியாமல் போனது ஏன்? - கார்த்திக் சுப்பராஜ் விவரிப்பு

ஸ்டார்க்கர்

விஜய்யுடன் இணைந்து பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

தனது அடுத்த படத்துக்காக விஜய் கதைகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கூறிவந்தார்கள். அதில் பலமுறை பேசப்பட்ட பெயர் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், விஜய் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி இணைந்து பணிபுரியவே இல்லை.

தற்போது ‘ரெட்ரோ’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் விஜய்யுடன் பணிபுரிய முடியாமல் போனதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில், “விஜய் சாரை பலமுறை சந்தித்து கதை கூறியிருக்கிறேன். ‘ஜிகிர்தண்டா’ பார்த்துவிட்டு, ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க என்று பேசினார் விஜய் சார். அப்போதில் இருந்தே பலமுறை அவருக்கு கதைகள் கூறியிருக்கிறேன்.

முதலில் எனக்கு ஒரு கதையை நன்றாகச் சொல்ல தெரியாது. ரஜினி சாரையும் சந்தித்து நிறைய கதைகள் கூறியிருக்கிறேன். அவரிடம் மட்டும் ஏதோ ஒன்று உள்ளே இறங்கி நன்றாக சொல்லிவிடுவேன். விஜய் சாரிடம் கூறிய கதைகள் ஏதோ அவருக்குப் பிடிக்கவில்லை. கடைசியாக அவரை சந்திக்கும்போது கூட “என்ன... நமக்கு மட்டும் சரியான கதை அமைய மாட்டிங்குதே” என்றார்.

‘விஜய்69’ படத்துக்கு போய் கதை கூறினேன். அது வேண்டாம் என்றவுடன் வேறொரு கதையை முடிவு செய்து கூற திட்டமிட்டேன். அதற்குள் விஜய் சார் இயக்குநர் ஹெச்.வினோத்தை தேர்வு செய்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

SCROLL FOR NEXT