தமிழ் சினிமா

“என் எதிர்காலத்தை கடுமையாக்க வேண்டாம்...” - பவித்ரா லட்சுமி உருக்கம்

ஸ்டார்க்கர்

தான் கடுமையான உடல்நிலை பிரச்சினையை எதிர்கொண்டு இருப்பதாக நடிகை பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கடினமாக்க வேண்டாம் என்று அவர் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. சில படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சில மாதங்களாகவே இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டுள்ளார் என்று செய்திகள் பரவியது. இது தொடர்பாக சில விளக்கங்கள் கொடுத்திருந்தார் பவித்ரா லட்சுமி. மேலும், அவரது சமீபத்திய சமூக வலைதள புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இதனால் மீண்டும் வதந்திகள் பரவ தொடங்கியது. இது தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பவித்ரா லட்சுமி. அதில் “என் தோற்றம் மற்றும் எடை குறித்து என்னைப் பற்றி நிறைய ஊகங்கள் பரவி வருகின்றன. என் தரப்பில் இருந்து அதற்கு விளக்கங்கள் கொடுத்த பிறகும், அவை நிறுத்தப்படவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் என்று சொல்வது மற்றும் பல்வேறு ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது மிகவும் தேவையற்றவை. சில கருத்துகள் எல்லாம் என்னவென்று கூட நான் குறிப்பிட விரும்பவில்லை.

நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன், நான் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன், அதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன், நான் நல்ல கரங்களிலும் சரியான பராமரிப்பிலும் இருக்கிறேன். உண்மையான அக்கறையுடனும் அன்புடனும் இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றி. இந்த தருணத்தில் அது மிகவும் முக்கியமானது.

அனைத்து ஊடகங்களையும் மக்களையும் கேட்டுக்கொள்கிறேன், என் பெயரையும் நல்லெண்ணத்தையும் பணயம் வைத்து உங்கள் பொழுதுபோக்குக்காக வதந்திகளைப் பரப்ப வேண்டாம். எனக்கு ஒரு வாழ்க்கை மற்றும் எதிர்காலம் உள்ளது, ஏற்கெனவே இருப்பதை மீண்டும் கடினமாக்க வேண்டாம். மேலும் தயவுசெய்து உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ நீங்கள் செய்ய அனுமதிக்கும் எதையும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டாம்.

நான் உங்களிடம் கேட்பது கொஞ்சம் மரியாதை மற்றும் அன்பு மட்டுமே. இவ்வளவு நாள் நீங்கள் எனக்குக் கொடுத்தது அவ்வளவுதான், தயவுசெய்து இப்போதும் அதை மாற்றாதீர்கள். உங்கள் பவித்ரா சீக்கிரமே திரும்பி வருவாள்” என்று தெரிவித்துள்ளார் பவித்ரா லட்சுமி.

View this post on Instagram

A post shared by Pavithralakshmi (@pavithralakshmioffl)

SCROLL FOR NEXT