தமிழ் சினிமா

கதையை தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு இருக்க வேண்டும்: ஜெய் கார்த்திக்

செய்திப்பிரிவு

ராம் நடித்த 'சவரக்கத்தி', விஷால் நடித்த 'துப்பறிவாளன்', 'அயோக்யா', 'துர்கா' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜெய் கார்த்திக். இவர் இப்போது சிபிராஜ் நடித்துள்ள 'டென் ஹவர்ஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது:நான் பி.சி.ஸ்ரீராம் சாரிடம் அசிஸ்டென்டாக இருந்து ஒளிப்பதிவாளர் ஆனேன். 'லியோ', 'கேம் சேஞ்சர்', 'சிக்கந்தர்' உள்ளிட்ட படங்களின் சண்டைக் காட்சிகளுக்கு மட்டும், நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இப்போது நான் பணியாற்றியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. ‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ படம் என்பதால் முழு படத்தையும் இரவில்தான் எடுத்தோம். அதிகமான லைட்டிங்கை பயன்படுத்த இயலவில்லை. ஒரு படத்தின் கதையை தொந்தரவு செய்யாமல் ஒளிப்பதிவு இருக்க வேண்டும் என்பதால் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அதிகம் மெனக்கெட்டோம்.

எங்களுக்கு அனுமதி கிடைத்த சிறிய இடத்தில், சாலைகள் தொடர்பான காட்சிகளைப் படமாக்கினோம். பின்னர் அதை வெவ்வேறு இடங்களில் நடப்பது போல மாற்றினோம். ‘துப்பறிவாளன் 2’ படத்துக்காக லண்டன், அஜர்பைஜானில் சில காட்சிகளைப் படமாக்கினோம். அந்தப் படத்தின் கதை, சிறப்பானது. அது விரைவில்தொடங்கும் என்று நம்புகிறேன். அடுத்தும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

கரோனா காலகட்டத்தில் மலேசியாவில் ‘காதல் மாதிரி’ என்ற வெப் சீரிஸை சேனல் ஒன்றுக்காக நானே ஒளிப்பதிவு செய்து இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து ஒளிப்பதிவில் கவனம் செலுத்த இருக்கிறேன். எதிர்காலத்தில் படம் இயக்குவேன். இவ்வாறு ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் கூறினார்.

SCROLL FOR NEXT