தமிழ் சினிமா

சினிமாவிலிருந்து சிலிக்கான் வரை… அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப வல்லுநரை சந்தித்தார் கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) விஷயங்களில் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன் ஏ.ஐ தொடர்பான படிப்புகளை அமெரிக்காவில் அவர் படித்து வந்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார் கமல்ஹாசன்.

அங்கு சான் பிரான்சிஸ்கோவிலுள்ள பெர்ப்ளக்ஸிட்டி (Perplexity) என்ற ஏ.ஐ நிறுவன தலைமையகத்துக்கு சென்ற அவர், அதன் இணை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ‘‘சினிமாவிலிருந்து சிலிக்கான் வரை, கருவிகள் பரிணமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அடுத்தது என்ன என்கிற நமது தாகம் அப்படியேதான் இருக்கிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ப்ளக்ஸிட்டி தலைமையகத்துக்கு நான் சென்றது உத்வேகம் அளித்தது. அங்கு அரவிந்த் ஸ்ரீனிவாஸை சந்தித்தேன். எதிர்காலத்தை உருவாக்கும் அவரது அற்புதமான குழு மூலம் இந்திய புத்திசாலித்தனம் பிரகாசிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசனை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பெர்ப்ளக்ஸிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ‘‘உங்களைச் சந்தித்து உபசரித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சினிமாவில் அதிநவீன தொழில்நுட்பத்தை இணைக்கவும் அது தொடர்பாக இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற உங்கள் ஆர்வமும் ஊக்கமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT