‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் உலகளவில் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். அதனை வைத்து படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தற்போது தமிழில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் ப்ரியா பிரகாஷ் வாரியர், “எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியவில்லை. முதல் உரையாடல் தொடங்கி கடைசி நாள் படப்பிடிப்பு வரையில் நானும் குழுவில் ஒருவர் என்பதை உணர வைத்தீர்கள். யாரும் ஒதுக்கப்பட்ட மாதிரி உணரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தீர்கள். நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, எங்கள் அனைவரையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள ஒருபடி மேலே சென்றீர்கள். கப்பலில் எங்கள் அனைவருடன் சேர்ந்து சாப்பிட்ட பொழுதுகள், ஜோக்குகள் என அந்த அழகிய தருணங்கள் எதையும் மறக்க முடியாது.
உங்களைப் போல் அளவுக்கு அதிகமான ஆர்வம், ஞாபகம், பாசம் கொண்ட ஒருவரை இன்னும் சந்திக்கவில்லை. நீங்கள் குடும்பம், கார், பயணம், கார் ரேஸ் பற்றி பேசும் போது உங்கள் கண்களில் ஒளிரும் பார்வை – அது ஒரு திருவிழா மாதிரி. நீங்கள் எப்போதும் சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் கவனிக்கிறீர்கள், மதிக்கிறீர்கள். தளத்தில் உங்களுடைய அமைதியும், அக்கறையும் இன்றைய இளைஞர்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தி. நான் அதை என் வாழ்க்கை முழுவதும் எடுத்துச் செல்வேன்.
உங்களது அன்பும், மென்மையும் இன்னும் எனக்கு அதிசயமாக இருக்கிறது. நீங்கள் ஒரு ரத்தினம். எந்த உயரத்துக்கு சென்றாலும், தாழ்மையாக இருக்கவேண்டும் என்பதை உங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். இன்று வரையில் என் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான தருணம் என்றால், உங்களோடு நடனமாடிய தருணம் தான். ‘தொட்டு தொட்டு’ பாடல் எனக்கு இனிமையான, இதயத்துக்கு நெருக்கமான ஒரு பாடலாக ஆகிவிட்டது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் உங்களோடு நடித்த அனுபவம் என்றென்றும் என் மனதில் பதிந்திருக்கும். உங்களை ஒரு நபராக அறிந்து, உங்களோடு வேலை செய்ததே எனக்கு பெருமை. மீண்டும் உங்களோடு பணிபுரிய முழு மனதோடு விரும்புகிறேன்” என்று ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.