சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் படம் ‘ஹிருதயபூர்வம்’. இதில் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “மோகன்லால் சார், சத்யன் சார் போன்ற ஜாம்பவான்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் சினிமா மாயாஜாலத்தை எவ்வாறு உயிர்ப்பிக்கிறார்கள் என்பதைப் பார்த்தேன். இதையெல்லாம் அவர்கள் மிகவும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் செய்கிறார்கள்.
மிகவும் திறமையான சிலருடன் பணிபுரிந்தேன். தேக்கடியின் அழகான மலைகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் ஒரு மகிழ்ச்சியான மாதத்தைக் கழித்தேன். குளிர்ந்த மாலைகளில் என்னை இதமாக வைத்திருக்க முடிவில்லா எலுமிச்சை தேநீர் குடித்தேன். உதவி இயக்குநர்களின் அழகான குழு இல்லாமல் இந்தப் படம் இப்படி இருந்திருக்காது” என்று கூறியிருந்தார்.
இத்துடன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்தார். அதில் ரசிகர் ஒருவர் மோகன்லாலின் வயதையும், மாளவிகா மோகனின் வயதையும் குறிப்பிட்டு, “ஏன் இந்த மூத்த நடிகர்கள் தங்கள் வயதுக்கு பொருந்தாத கதாபாத்திரங்களில் நடிக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “இது ஒரு காதல் படம் என்று யார் சொன்னது? உங்களின் அரைகுறையான ஆதாரமற்ற ஊகங்களால் மனிதர்களையும், ஒரு படத்தையும் மதிப்பிடுவதை நிறுத்துங்கள்” என்று அட்வைஸ் செய்துள்ளார். மாளவிகாவின் இந்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.