“உங்களை வளர்த்துவிட்ட சினிமாவை வாழ வையுங்கள்” என்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலக வர்த்தகத்தின் முக்கிய நபரான திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், “முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய சுதந்திரம், வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர்களுக்கு மூன்று, நான்கு படங்கள் எல்லாம் வந்தது. அப்போது திரையுலகம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது.
இப்போது தொழில்நுட்பம் பலமடங்கு வளர்ந்துவிட்டாலும், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கிவிட்டு குறைவான நாட்கள்தான் நடிக்கிறார்கள். ஒரு படத்துக்கு நாயகன் 55 நாட்கள் வேலை செய்தால் போதும். ‘பாகுபலி’ மாதிரியான படங்களுக்கு தான் நாயகனுக்கு நிறைய நாட்கள் தான் தேவைப்படும்.
திரையரங்குகள் ஓட்டத்துக்கு நாயகர்கள் குறைந்தது இரண்டு படமாவது நடிக்க வேண்டும். ஓடிடி, தொலைக்காட்சி எல்லாம் காணாமல் போய்விட்டது. திரையரங்குகளை நம்பிதான் இன்றைய சினிமா இருக்கிறது. முன்னணியில் உள்ள 12 நடிகர்கள் அனைவருமே வருடத்துக்கு 2 படங்கள் நடித்தீர்கள் என்றால் வருடத்துக்கு 25 படங்கள் வரை வெளியாகும். மக்களும் திரையரங்கை நோக்கி வருவார்கள்.
இப்போது மாதவன் ஓடிடியில் நடிக்க தொடங்கிவிட்டார். உங்களை வளர்த்துவிட்டது சினிமா. இப்படியே ஒவ்வொருவரும் சென்றால் தமிழ் சினிமா அழித்துவிடும். அதற்கு காரணமாகிவிடாதீர்கள். உங்களை வளர்த்துவிட்ட சினிமாவை வாழ வையுங்கள். அதுதான் நடிகர்களுக்கு வைக்கும் வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார்.