தமிழ் சினிமா

‘காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை...’ - ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை

ஸ்டார்க்கர்

தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில் அதிகரித்திருக்கிறது. இதில் ராஜ்கமல் நிறுவனம் சிக்கியிருக்கிறது. இதற்காக அறிக்கை ஒன்றை தங்களுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது ராஜ்கமல் நிறுவனம்.

அதில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” என்று ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தினை தயாரித்துள்ளது ராஜ்கமல் நிறுவனம். அப்படத்துக்குப் பிறகு அன்பறிவ் இயக்கும் படத்தினை தயாரிக்கவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகனாக நடிக்கவுள்ளார் கமல்.

pic.twitter.com/jGa3JGKjkI

SCROLL FOR NEXT