பெற்றோரின் பிரிவால், திருமணம், குடும்பம் என்பதில் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கிறான் வாசு (ரியோ ராஜ்). அப்பாவும் தாத்தாவும் ஆணாதிக்கவாதிகளாக இருந்தாலும் குடும்ப அமைப்பின் நன்மையை உணர்ந்து வளர்ந்தவள் மனோ (கோபிகா ரமேஷ்). காதலில் விழும் இருவரும் பின்னர் ‘பிரேக்-அப்’ என்று பேசிப் பிரிய, அடுத்த சில நாள்களில் மனோ கர்ப்பமாக இருப்பது உறுதியாகிறது. அதைக் கலைத்துவிட வற்புறுத்துகிறான் வாசு. அதற்கு மனோ ஒப்புக்கொண்டாளா, இல்லையா என்பது கதை.
ஓர் அறிமுக இயக்குநர் தன்னுடைய முதல் படைப்பைச் சமூகத்தின் மேன்மைக்காகக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்காகப் போராடி உருவாக்குவது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும் சம்பவம். அப்படியொரு சம்பவத்தைச் செய்திருக்கிறார் ஸ்வினீத் எஸ். சுகுமார்.
புத்தாயிரத் தலைமுறையின் காதலில் மலிந்திருக்கும் அகச்சிக்கல், குடும்பம், குழந்தை என்ற பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்கும் மனோபாவம், திருமணத்துக்கு முந்தைய பாலுறவு, அதனால் நேரும் கர்ப்பத்தைக் கையாளும் அணுகுமுறை என கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் வழியாக நம்முடன் ஆழமாக உரையாடுகிறது படம். முக்கியமாகக் கருக்கலைப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதில் முழுமையான வெற்றியைப் பெற்றுவிடுகிறது. கருக்கலைப்பு என்பது, பெண்ணுக்கு உடல், மன ரீதியாக வலிகளைக் கொடுக்கும் பெரும் தண்டனையாக மாறி, உயிருக்கே உலை வைக்கும் ஒன்றாகவும் மாறிவிடலாம் என்பதை நெத்தியடியாகக் கடத்துகிறது படம்.
பிரிந்துவிடுவது என்கிற பிரேக் - அப் சண்டையிலிருந்து தொடங்கும் படம், வாசு - மனோவின் காதல் எத்தகையது, அவர்கள் எப்படிப்பட்ட குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர்கள், எதற்காகப் பிரிந்தார்கள், எத்தகைய சூழலில் தவறு செய்தார்கள், இறுதியில் அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பதைக் கூறும் விறுவிறுப்பான ‘நான்-லீனியர்’ திரைக்கதை ஈர்க்கிறது.
வாசு, மனோவாக நடித்தவர்களும் வாசுவின் நண்பனும் காதலர்களின் குடும்பத்தினராக வருபவர்களும் தரமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். இதுபோன்ற படத்தைத் தயாரித்ததற்காக யுவன் சங்கர் ராஜாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்; ஆனால், அவரின் இசை, படத்துக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ‘நான் - லீனியர்’ கதை சொல்லலைக் குழப்பம் இல்லாத வகையில் தனது படத் தொகுப்பின் மூலம் செம்மை செய்திருக்கிறார் எடிட்டர் தமிழரசன். இந்தப் படத்தைக் காதலிப்பவர்களும், காதலித்தவர்களும் காதலிக்கப் போகிறவர்களும் காண்பதன் மூலம், ‘உயிரின் ஓசை’ உணர முடியும்.