‘குயின்' இந்தி படத்தின் தென்னிந்திய ரீமேக் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று இருக்கிறது. அக்டோபரில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தை தயாரிப்பாளர் மனு குமரன் தயாரித்து வருகிறார்.
தமிழில் ’பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ’தட்ஸ் மஹாலக்ஷ்மி’, கன்னடத்தில் ’பட்டர்ப்ளை’, மலையாளத்தில் ’ஜாம் ஜாம்’ என்று பெயரிட்டுப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பரூல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் கங்கனா ராவத் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், தெலுங்கில் பிரஷாந்த் வர்மா, மலையாளத்தில் நீலகண்டா ஆகியோர் இயக்கி வருகிறார்கள். அனைத்து ரீமேக் படப்பிடிப்பும் முழுமையாக முடிவுற்று இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி, முடித்திருப்பதால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
இதே போன்று அக்டோபர் மாதத்தில் ஒரே தேதியில் அனைத்து மொழி ரீமேக் படங்களையும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.