தமிழ் சினிமா

சப்தம்: திரை விமர்சனம்

செய்திப்பிரிவு

மூணாறில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்கின்றனர். பேய்தான் இதற்குக் காரணம் என வதந்தி பரவுகிறது. அங்கே பேய் இல்லை என்பதை நிரூபிக்காவிட்டால், பழமையான அக்கல்லூரியின் புகழ் கெடுவதுடன் மாணவர் சேர்க்கையும் பாதிக்கப்படும். இதனால், அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவற்றுடன் தொடர்புகொள்ளும் ‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ ஆன ரூபனை (ஆதி) வரவழைக்கின்றனர். அவர் தனது விசாரணை மற்றும் ஆய்வில் என்ன கண்டுபிடித்தார்? தற்கொலைகளின் மர்மம் விடுபட்டதா? என்பது கதை.

‘பேராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்’ என்பவர் யார், அவர்கள் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தை எப்படிக் கண்டறிகிறார்கள், ஒலிகள் வழியாக அவற்றுடன் எவ்வாறு உரையாடுகிறார்கள், அவை வெளிப்படுத்தும் ஒலிகளை எவ்வாறு டீகோட் செய்கிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் தொடக்கக் காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.

ரூபனாக வந்து நம்பகமான நடிப்பைத் தந்திருக்கும் ஆதி, விசாரணையைத் தொடங்கும் விதம், கல்லூரி விரிவுரையாளரான அவந்திகாவுக்கும் (லட்சுமி மேனன்) அவருக்குமிடையில் துளிர்க்கும் மெல்லிய நட்புணர்வு, அதன்வழி ரூபன் விசாரணையைத் தீவிரமாக்குவது என முதல் பாதித் திரைக்கதை வேகமாக விரைகிறது.

இரண்டாம் பாதியில் கல்லூரியின் பழம்பெரும் நூலகக் கட்டிடம் நோக்கி நகரும் திரைக்கதையில் துலங்கும் கதாபாத்திரங்களும் அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களும் வெளிப்படுகின்றன. அதில், ‘சப்தம்’ என்பதை, உயிரைக் கொல்லும் இரைச்சல், உயிரை வளர்க்கும் ‘இசை’ என இரண்டு பரிமாணங்களில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர். இந்தச் சித்தரிப்பில் இருக்கும் நம்பகத்தன்மை, மர்மத்தை விலக்கிக் காட்டும் மீதிக் கதையின் பயணத்தை உணர்வுபூர்வமான ஒன்றாக மாற்றிவிடுகிறது.

அதேநேரம், தேவையற்ற உறுத்தல்களாக வரும் சில ஜம்ப் ஹாரர்’கள், ப்ளாஷ் கட்’களில் வரும் சூனியக்காரி கதாபாத்திரம் ஆகியவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்தக் குறைகளை மீறி, தமனின் பின்னணி இசை, கதையுடன் தொடர்பில் இருக்கும் மாயத்தைச் செய்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களும் தரம்.

ரூபனுக்கு உதவும் ஊழியராக வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அவரை வைத்து, கதையில் சப்தம் கொண் டிருக்கும் முக்கியத்துவத்துக்குக் கவுரவம் செய்திருக்கிறார் இயக்குநர். ஒரு காட்சியில் வரும் எம்.எஸ். பாஸ்கரின் தமிழ் கலந்த மலையாளம் டச்சிங்!

ஓர் இடைவெளிக்குப் பின் நடித்திருக்கும் லட்சுமி மேனன், அமானுஷ்யத்தால் ஆட்கொள்ளப்படும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். திரைக்கதை வழங்கிய அபாரமான வெளியை, மூத்த கதாநாயகி களான சிம்ரனும் லைலாவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஈரம்’ படத்தைக் கொடுத்த அறிவழகன், அதே ஹீரோவைக் கொண்டு, சில சமரசங்களுடன். ஏமாற்றம் அளிக்காத திரை அனுபவத்தை சப்தம் வழியே தந்திருக்கிறார்.

SCROLL FOR NEXT