தமிழ் சினிமா

“தமிழ் ரசிகர்களின் அன்பு...” - ‘டிராகன்’ நாயகி கயாடு லோஹர் நெகிழ்ச்சி

ப்ரியா

‘டிராகன்’ படம் மூலம் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து நடிகை கயாடு லோஹர் கூறும்போது, “நான் தமிழ் பொண்ணு இல்லை. எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது” என்று ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “எனக்கும், டிராகன் படத்துக்கும், இந்த பல்லவிக்கும் கிடைக்கும் அன்பும் ஆதரவும் உணர்வுபூர்வமானது. தியேட்டரில் நீங்கள் எனக்காக அடிக்கும் விசில், இன்ஸ்டாவில் நீங்கள் எனக்காக செய்யும் ரீல்ஸ் எடிட்ஸ், அழகான கமென்ட்கள் அனைத்தையும் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் தமிழ்ப் பொண்ணு இல்லை. எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், எனக்கு நீங்கள் அளிக்கும் அன்பு விலைமதிப்பற்றது. இதற்கு ஈடாக அன்பைத் திருப்பித் தரும் வகையிலேயே என் படங்கள் இருக்கும். நீங்கள் பெருமைப்படும் வகையில் நடந்துகொள்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் தமிழிலேயே பேசியிருக்கிறார். அதன்பின், தெலுங்கிலும் தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அதில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் பெரும் சென்சேஷன் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் எங்கு திரும்பினாலும் கயாடு லோஹர் தான். ‘டிராகன்’ படம் வெளியான பிறகு அவரது ரீல்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. கயாடு லோஹரின் புகைப்படங்களை பல பரிமாணங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த கயாடு லோஹர், 2021-ல் வெளியான ‘முகில்பெடெட்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகம் ஆனார். பிறகு 2022-ல் வெளியான ‘அல்லுரி’ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் ‘டிராகன்’ படமே அவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிகம் தேடப்படும் ஹீரோயினாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by kayadulohar (@kayadu_lohar_official)

SCROLL FOR NEXT