தமிழ் சினிமா

‘குட் பேட் அக்லி’ பின்னணி இசை ஸ்பெஷல் என்ன? - ஜி.வி.பிரகாஷ் விவரிப்பு

ஸ்டார்க்கர்

‘குட் பேட் அக்லி’ பின்னணி இசையில் தான் புகுத்தியுள்ள சிறப்புத் தன்மைகள் குறித்து பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

மார்ச் 7-ம் தேதி ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து தயாரித்துள்ள ‘கிங்ஸ்டன்’ வெளியாகவுள்ளது. இதனை பல வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக அளித்த பேட்டியொன்றில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் பின்னணி இசை குறித்து பேசியிருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள அப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தின் பின்னணி இசை குறித்து ஜி.வி.பிரகாஷ் “‘கிரீடம்’ படம் முழுக்க கதையை மையப்படுத்தியே இருக்கும். அதில் 3 ஹிட் பாடல்கள் கொடுத்தேன். 18 ஆண்டுகள் கழித்தும் கூட இப்போது அப்பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த முறை முழுக்கவே நாயகனை மையப்படுத்தியே கதை.

நாயகனின் மாஸ் காட்சிகள் அனைத்துக்குமே எனது பெஸ்ட் என்னவோ அதில் பணிபுரிந்துள்ளேன். அதை பல பேர் செய்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து மாறுபட்டு நான் என்ன பண்ணப்போகிறேன் என்ற கேள்விக்கு சரியான பதிலாக என் இசை இருக்கும்.

ஆதிக் எப்போதுமே வித்தியாசமான இசையை விரும்புகிறவர். திரையில் கொண்டாட்டமாக இருக்க விரும்புகிறவர். அதற்கு தகுந்தவாறு காட்சிகள் வைத்திருப்பார், அதை தாண்டி இசையாக ஒரு எனர்ஜி கொடுக்க வேண்டும். அப்படித்தான் பணிபுரிந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்களை தேவி ஸ்ரீபிரசாத் உருவாக்கி இருக்கிறார். ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் தமிழக உரிமையினை ராகுல் கைப்பற்றி இருக்கிறார்.

SCROLL FOR NEXT