இந்து புராணங்கள் சொல்லும் கதைகள் ஏராளம். அதில் பல கதைகள் திரைப்படங்களாகி வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழ் சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் இதுபோன்ற கதைகளே அதிகம் உருவாக்கின. அப்படி உருவான புராண கதைகளில் ஒன்று, ‘கங்காவதார்’.
அயோத்தி மன்னன் பகீரதன், தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வழி தேடி முனிவர்களை நாடுகிறார். அப்போது முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாயத்தில் ஒடிக் கொண்டிருக்கும் கங்கை நதியை, பூமிக்குக் கொண்டு வந்து, உன் மூதாதையர்களின் அஸ்தியை அதில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறுகிறார்.
இதனால் கங்கையை பூமிக்குக் கொண்டு வர, கடும் தவம் புரிகிறான் மன்னன். தவத்தை மெச்சும் கங்கா தேவி, பகீரதன் முன் தோன்றி, நிபந்தனை விதிக்கிறாள். நான் என் வேகத்தில் இந்த பூமி நோக்கி வந்தால், வேகம் தாங்காமல் பூமி அழிந்துவிடும். அதனால் என் வலிமையைத் தாங்கும் ஒருவர், அவர் தலையில் என்னைத் தாங்கி இந்தப் பூமிக்குக் கொடுக்க வேண்டும், அதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய் என்கிறார்.
பகீரதன் தவம் செய்கிறார். அதை ஏற்று சிவபெருமான் தன் சடாமுடியில் கங்கையை இறக்கி, அதன் வேகத்தைக் குறைத்து பூமிக்குத் திருப்பினார் என்பது புராணம் சொல்லும் கதை. இந்தக் கதையை வைத்துதான் விடாமுயற்சியோடு அடையும் விஷயங்களை ‘பகீரத பிரயத்தனம்’ என்று சொல்வது வழக்கம்.
இந்தப் புராணக் கதைதான் படம். படத்தை இயக்கியவர் சி.கே.சச்சி. கோவையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சி.கே.சதாசிவம், தனது பெயரைச் சுருக்கி சி.கே.சச்சி ஆனார். சினிமா ஆர்வத்தில் அந்த காலத்திலேயே லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்று திரும்பியவர் இவர். சென்னையில் பிரபலங்களுடன் தொடர்பிலிருந்த இவர், எல்லீஸ். ஆர்.டங்கனின் முதல் படமான ‘சதி லீலாவதி’யில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
பிறகு 1940-ல் ‘சந்திரகுப்த சாணக்யா’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இதில் நாயகியாக, இளவரசியாக நடித்தவர், கர்நாடக இசைப் பாடகி என்.சி.வசந்த கோகிலம். இதில் அவர் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததாக அப்போது பேசிக் கொண்டார்கள். அவருக்கு ‘ஹாலிவுட் லுக்’கை வழங்கியிருந்தார், சி.கே.சச்சி. அவருக்கான மேக்கப் சாதனங்கள் லண்டனிலிருந்து வந்தன. இதை அப்போது பரபரப்பாகப் பேசினார்கள்.
இந்த ‘கங்காவதார்’ படத்தை அடையாறு சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ (பின்னர் சத்யா ஸ்டூடியோ) தயாரித்தது. கங்கா தேவியாக வசந்த கோகிலமும் பகீரதனாக நாகர்கோவில் மகாதேவனும் சி.வி.வி. பந்துலு சிவபெருமானாகவும் டி.எஸ். தமயந்தி பார்வதியாகவும் நடித்தனர். பாடகர் பி.ஜி. வெங்கடேசன் நாரதராக நடித்தார். பகீரதனை மயக்க இந்திரனால் அனுப்பப்பட்ட தேவலோகப் பெண்ணாக வி.என்.ஜானகி நடித்தார். காளி என். ரத்னம், சி.டி. ராஜகாந்தம், டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன், எஸ். கே. பத்மாதேவி, பி.ஆர்.மங்களம் போன்றோரும் நடித்தனர்.
படத்தில் வசந்த கோகிலம் பாடிய ‘வானூறு மாமதியே’, ‘ஆனந்தமய வானுலகிதே’, ‘பாங்கான சோலை அலங்காரம்’, ‘வாணி அருள் புரிவாய்’, 'இதுவென்ன வேதனை’ மற்றும் நாகர்கோவில் மகாதேவன் பாடிய 'பிறந்து யாது பயன்’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தின் கதையுடன் தொடர்பில்லாமல் நகைச்சுவைப் பாடல் ஒன்றும் இருந்தது. அதில் காளி என். ரத்னத்துடன் அன்றைய நகைச்சுவை நடிகர்கள் நடித்தனர்.
1942-ம் ஆண்டு பிப்.13-ல் வெளியான இந்தப் படம், அப்போது வரவேற்பைப் பெற்றது.