‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்துவிட்டு தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தினை திரையிட்டு காட்டி வருகிறார் தனுஷ். முதலாவதாக எஸ்.ஜே.சூர்யா பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்.
அதில் மாரி செல்வராஜ், “ஆம், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வழக்கமான காதல் கதை’யை பார்க்க முடிந்தது. தனுஷ் சார் உருவாக்கியுள்ள இந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தேன். அந்த சந்தோஷம் திரையரங்கில் படம் பார்ப்போரின் மனதையும் தொட்டுப் போகும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் அதிக மகிழ்ச்சி காதலின் பசுமையில் உள்ளது. இயக்குநர் தனுஷ் சார் அந்த உணர்வை அவரது கலை மூலம் உயிர்ப்பித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் பாவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக லியோ பிரிட்டோம், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.