சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100-வது படமாகும். அத்துடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25-வது படம். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு புதன்கிழமை வெளியிட்டது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் இணையத்தில் வெளியாகிவிட்டது.
இப்படியான சூழலில் படத்தின் டைட்டில் டீசர் புதன்கிழமை வெளியாகும் என்று படக்குழு அறிவித்தபிறகு, அதே நாளில் காலை 11 மணியளவில் தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. அப்படத்துக்கு தமிழில் ஒரு தலைப்பும், தெலுங்கில் ஒரு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. தமிழில் ‘சக்தி திருமகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்துக்கு தெலுங்கில் ‘பராசக்தி’ என்று வைத்துள்ளனர்.
புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா
இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா#VA25 @ArunPrabu_ @vijayantonyfilm pic.twitter.com/XCxjv95UVH
இது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ஒரே படத்துக்கு ஏன் இரண்டு தலைப்பு என்றும், ஏற்கெனவே சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற தலைப்பை முடிவு செய்தபிறகு இப்படி அவசர அவசரமாக முன்னறிவிப்பு எதுவுமின்றி ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது சரியா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ‘பராசக்தி’ தெலுங்கு டைட்டிலின் உரிமையை தென்னிந்திய ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்த ஆதாரத்தை விஜய் ஆண்டனி பகிர்ந்திருந்தார். இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் ’பராசக்தி’ டைட்டிலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஆதாரத்தை பகிர்ந்திருந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பழைய ‘பராசக்தி’ படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம், சிவகார்த்திகேயனின் ’பராசக்தி’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.