வெற்றிமாறன் கதையை கவுதம் மேனன் இயக்க, அதில் நாயகனாக நடிக்கவுள்ளார் ரவி மோகன். இதனை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் தனது அடுத்த படத்தை கவுதம் மேனன் இயக்கவுள்ளார் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் விஷால். இதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் - விஷால் புதிய கூட்டணி என பலரும் கருதினார்கள். இப்படத்தை கே.பி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள். தற்போது இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படத்தில் வெற்றிமாறன் கதையை இயக்கவுள்ளதாகவும், அதில் ரவி மோகன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ரவி மோகன் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் இயக்குவது உறுதியாகிறது. கணேஷ் கே.பாபு இயக்கவுள்ள படத்தினை முடித்துவிட்டு, கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பார் என தெரிகிறது.
வேல்ஸ் நிறுவனம் மற்றும் பி.டி.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கு தேதிகள் கொடுத்துள்ளார் ரவி மோகன். இதில் எந்த நிறுவனத்துக்கு கவுதம் மேனன் படத்தை பண்ணவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும்.