தமிழ் சினிமா

ரூ.25 கோடி வசூலை நெருங்கிய ‘மதகஜராஜா’ - தொடரும் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

ப்ரியா

சுந்தர்.சி, விஷால், சந்தானம் காம்போவில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியான முதல் 5 நாட்களில் மட்டும் ரூ.25 கோடி வசூலை நெருங்கி பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆக வலம் வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட படம்தான் ‘மதகஜராஜா’. இப்படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் பல பிரச்சினைகளில் சிக்கியதால் ரிலீஸில் முடக்கம் நீடித்தது. பல தடைகளைக் கடந்து, 12 ஆண்டுகள் கழித்து இப்படம் ஜனவரி 10-ல் வெளியானது.

ஆனால், இப்படத்துக்கு யாருமே எதிர்பாராத விதமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியிலும், மக்கள் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. இதனால், இப்படம் தான் 2025-ம் ஆண்டு முதல் வெற்றிப் படம் என கருதப்படுகிறது.

ப்ரோமோஷன்களுக்கான செலவினம் உள்பட ரூ.15 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், இந்திய அளவில் முதல் நாளிலும், இரண்டாவது நாளில் தலா ரூ.3 கோடி வசூலை ஈட்டியது. அதுவே, மூன்றாவது நாளில் இரு மடங்காகி, மூன்றாவது நாள் மட்டும் ரூ.6.2 கோடி ஈட்டியது. அதைவிட கூடுதலாக நான்காம் நாளில் ரூ.6.8 கோடி அளவில் வசூலை வாரிக் குவித்தது. ஐந்தாவது நாள் வசூல் மூலம் ரூ.25 கோடியை நெருங்கிவிட்டதாக மதிப்பிடப்படுகிறது. வார விடுமுறை முடிவில், வசூல் இன்னும் கூடும் சூழலில் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.40 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிவிடும் என்றும் திரை வர்த்தக நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படத்தைப் பொறுத்தவரையில், படம் வெளியான முதல் 7 நாட்களில் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் ரூ.7 கோடி அளவில் ஈட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT