பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தற்போது இ-மெயிலுக்காக காத்திருக்கிறது ‘விடாமுயற்சி’ படக்குழு.
‘பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக் தான் ‘விடாமுயற்சி’ என்பது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் படத்தின் வெளியீடு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ‘விடாமுயற்சி’ வெளியீட்டு தேதிக்காக பல்வேறு படங்களும் காத்திருக்கின்றன.
இது தொடர்பாக விசாரித்த போது, ஹாலிவுட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது. எவ்வளவு பணம் உரிமைக்குக் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. தற்போது இ-மெயில் ஒன்றுக்காக ‘விடாமுயற்சி’ படக்குழு காத்திருக்கிறது. அந்த இ-மெயில் வந்துவிட்டால், படத்தின் வெளியீட்டு தேதியுடன் கூடிய ட்ரெய்லரை வெளியிட படக்குழு தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.