‘பாட்ஷா’ படத்தினை தற்போதைய தொழில்நுட்ப ஏற்றவகையில் மாற்றி விரைவில் வெளியிடவுள்ளது படக்குழு.
சத்யா மூவிஸ் தயாரிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான படம் ‘பாட்ஷா’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், இப்போதும் தொலைக்காட்சியில் நல்ல டி.ஆர்.பி பெற்று வருகிறது. அதுமட்டுமன்றி அவ்வப்போது சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டு நல்ல வசூல் செய்து வருகிறது. ரஜினியின் திரையுலக வாழ்க்கையினை மாற்றியமைத்த படம் ‘பாட்ஷா’. இந்தியா முழுவதும் 15 மாதங்கள் வெற்றிகரமாக் ஓடிய இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸ் நிறுவனத்தின் 60-வது பொன்விழாவையும் கொண்டாடும் வகையில், அதிநவீன 4K மேம்பாடுகள் மற்றும் டால்பி அட்மாஸ் சவுண்ட் ஒலியுடன் கூடிய தொழில்நுட்பத்தில் ’பாட்ஷா’ படம் விரைவில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ரஜினி, நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்தராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு தேவா இசையமைப்பாளராக பணிபுரிந்து இருந்தார். ஆர்.எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ் வீரப்பன் சத்யா மூவீஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார். இதன் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.