‘இந்தியன் 3’ படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் மாபெரும் தோல்வி படமாக மாறியது. இதன் 3-ம் பாகம் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ஜனவரி 10-ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ வெளியாகவுள்ளது.
‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டை முன்னிட்டு, ‘இந்தியன் 3’ எப்போது வெளியீடு என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது சுமுகமாக முடியவடையவில்லை என்பதுதான் அனைவருக்கும் அதிர்ச்சி. ‘இந்தியன் 3’ படத்தின் காட்சிகளைப் பார்க்க வேண்டும், அதை வைத்து வியாபாரம் பேச வேண்டும் எனக் கேட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ஒரு பாடல் சேர்க்க வேண்டும், அதை படமாக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் ஷங்கர். அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அப்பாடல் இல்லாமலேயே படத்தை வெளியிடலாம் எனக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, 3-ம் பாகத்துக்கு என்று போடப்பட்ட ஒப்பந்தம்படி சம்பளம் 60 கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார் ஷங்கர்.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியப் போவதில்லை என்று தெரிந்துகொண்டு, அனைத்து சங்கங்களையும் அணுகியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. விரைவில் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது.