தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ எப்போது? - தயாரிப்பாளர் தாணு பதில்

ஸ்டார்க்கர்

‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் தாணு பதிலளித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. வெற்றிமாறன் – சூர்யா இருவருமே தங்களுடைய இதர படங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். ‘வாடிவாசல்’ படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.

தற்போது இருவருடைய தேதிகளுமே ஒரேசேர அமையும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தாணு, “சூர்யா தயாராக இருக்கிறார். ‘விடுதலை 2’ முடித்துவிட்டு வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வந்துவிடுவார். அதற்கான வேலைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது. லண்டனில் அனிமேட்ரானிக்ஸ் பணிகள் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. இப்போது ‘விடுதலை 2’ முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டிய நல்லது நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விரைவில் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT