தமிழ் சினிமா

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு - இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சிப் பகிர்வு!

செய்திப்பிரிவு

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு ஞாயிற்றுக்கிழமை (டிச.22) அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஜித், மகிழ் திருமேனி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் லைகா நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் மகிழ் திருமேனி கூறும்போது, “சார், உங்களுக்கு அளவு கடந்த அன்பும், நன்றிக்கடனும் உரித்தாகட்டும். நீங்கள் நீங்களாக இருப்பதன் மூலம் எங்கள் அனைவரையும் வழிகாட்டி, ஊக்கப்படுத்தி, உத்வேகப்படுத்துகிறீர்கள். ‘விடாமுயற்சி’ திரைப்படம் என்பது நீடித்த முயற்சியின் வெற்றி. ஒட்டுமொத்த குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.

தனிப்பட்ட முறையில், முதல் நாள் முதல் இந்த நாள் வரை நீங்கள் எனக்கு தந்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் மரியாதையும்” இவ்வாறு மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

இதுவரை ‘விடாமுயற்சி’ டீசரை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT