‘குட் பேட் அக்லி’ வெளியீடு குறித்து தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள அஜித்தின் நெருங்கிய நண்பர் ராகுல் தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் தமிழக உரிமையினை ராகுல் கைப்பற்றி இருக்கிறார். இவர் அஜித்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அதுமட்டுமன்றி சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டு வெற்றி கண்டார்.
காலை முதலே ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட்டில் இடம்பெற்ற அஜித் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது ‘குட் பேட் அக்லி’ புகைப்படங்களை பகிர்ந்து “பட்டாசு சும்மா கொளுத்தாம வெடிக்கும்.. கோடை முதல்” என்று தெரிவித்துள்ளார் ராகுல். இதன் மூலம் கோடை விடுமுறைக்கு ‘குட் பேட் அக்லி’ வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. ராகுலின் இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதன் பாடல்களை தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷும் உருவாக்கவுள்ளனர். அஜித் காட்சிகள் முடிவடைந்துவிட்டாலும் இதர நடிகர்களின் காட்சிகள் இன்னும் பாக்கியுள்ளது.