தமிழ் சினிமா

“ராமராக நடிப்பது ஒரு கனவு போல் இருக்கிறது!” - ரன்பீர் கபூர் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

“ராமராக நடித்து வருவது ஒரு கனவு போல் இருப்பதாக ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘ராமாயணா’ என்ற பெயரில் ராமாயணக் கதை படமாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. முதன் முறையாக இப்படம் குறித்து பேசியிருக்கிறார் ரன்பீர் கபூர்.

ரெட் சீ திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் ரன்பீர் கபூர். அந்தத் திரைப்பட விழாவில் அவருடைய அடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரன்பீர் கபூர், “தற்போது ‘ராமாயணா’ படத்தின் பணிபுரிந்து வருகிறேன். அது மிகப் பெரிய கதை. நண்பர் நமித் மல்ஹோத்ரா தயாரித்து வருகிறார். உலகமெங்கும் உள்ள சிறப்பான குழுவினரை வைத்து ராமாயணம் புத்தகத்தை ஆர்வமாக உருவாக்கி வருகிறார். இதனை நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அந்தக் கதையின் ஓர் அங்கமாக, ராமராக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இது எனக்கு ஒரு கனவு. இந்திய கலாச்சாரம், குடும்ப உறவுகள், கணவன் – மனைவி உறவு என அனைத்து கற்பிதங்களையும் கொண்ட படமாக ‘ராமாயணா’ இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ரன்பீர் கபூர்.

நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் இருவரும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ராமாயணா’. நிதேஷ் திவாரி இயக்கி வரும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT