சென்னை: அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்கள் ஒரேசமயத்தில் வெளியாகும் சூழல் உருவாகி இருக்கிறது. அஜித் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’. இதில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட போதே பொங்கல் வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது. அதே சமயத்தில் ‘விடாமுயற்சி’ படமோ படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்ததால், எப்போது வெளியீடு என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் ’விடாமுயற்சி’ டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
அதில் ‘பொங்கல் 2025’ என்று அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். ஒரே சமயத்தில் ஒரு நடிகரின் 2 படங்கள் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால், படக்குழுவினர் ஒருவரை ஒருவர் தொடர்புக் கொள்ளாமல் போட்டி போட்டு அறிவித்திருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் கோபத்தினை உருவாக்கி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் தான் முதலில் பொங்கல் வெளியீடு என்று உறுதிப்படுத்தினார்கள்.
அதே சமயத்தில் ‘விடாமுயற்சி’ படமோ இன்னும் படப்பிடிப்பு முடிவடையவில்லை. கிராபிக்ஸ் பணிகளை இப்போது தான் படக்குழு தொடங்கியிருக்கிறது. இதனால் ‘விடாமுயற்சி’ வெளியீடு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்குமே அஜித் இன்னும் டப்பிங் பேசவில்லை. இதனால் விரைவில் அவரே எந்த படம் முதலில் வெளியீடு என்பதை முடிவு செய்வார் என்கிறார்கள். அவர் தலையிடாத வரை இரண்டு படக்குழுவினரின் போட்டியும் முடிவடைய வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் திரையுலகில்.