நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘சூது கவ்வும் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி.வி.குமார், எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் சி.வி.குமார் பேசும்போது, “சூது கவ்வும் முதல் பாகம் எடுக்கும்போதே, 2-ம் பாகத்துக்கான ஐடியா இருந்தது. அதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இயக்குநர் நலனிடம், ‘இந்தப் படம் மரபுக்கு மீறியதாக இருக்கிறது; இது தொடர்பாக விமர்சனங்கள் வருமே’ என்றேன். அவரும் நிச்சயமாக என்றார். படம் வெளியானதும் மக்கள் கொண்டாடினார்கள். இது தவறான முன்னுதாரண படம் என்றும் விமர்சனங்கள் வந்தன. அப்போது, ‘‘இதை 3 பாகமாக உருவாக்க இருக்கிறோம். ‘சூது கவ்வும் 2’, 3-வது பாகமாக ‘சூது கவ்வும்-தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் எடுக்க இருப்பதாகச் சொன்னேன். அப்போது தான் இது நிறைவு பெறும்’’ என விளக்கமும் கொடுத்தேன்.
நலன் குமரசாமியிடம் பேசும்போது, ஒரு கட்டத்தில் ‘சூது கவ்வும் 2’ கதையை எழுத முடியவில்லை என்றும் சில ஆண்டுகள் கழித்து இதை உருவாக்கலாம் என்றும் சொன்னார். அவர் பிசியானதால் 2-ம் பாகத்தின் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொன்னார். இதன் திரைக்கதையை யாரால் எழுத முடியும் என்று நினைத்தபோது, அர்ஜுன் வந்தார். பிறகு ஒரு குழுவை உருவாக்கி எழுதினோம். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி எப்படிப் பொருத்தமாக இருந்தாரோ, இதில் மிர்ச்சி சிவா பொருத்தமாக இருப்பார் என தீர்மானித்து நடிக்க வைத்தோம். இயக்குநர் அர்ஜுன் இதன் திரைக்கதைக்காக 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டார். என் நிறுவனத்திலிருந்து வெளியாகும் 21-வது படம் இது” என்றார்.