தமிழ் சினிமா

திரை விமர்சனம் - எமக்குத் தொழில் ரொமான்ஸ்

செய்திப்பிரிவு

சென்னையில் சினிமா உதவி இயக்குநராக இருக்கிறார் உமாசங்கர் (அசோக் செல்வன்). மருத்துவமனையில் செவிலியாராக இருக்கும் லியோவை (அவந்திகா மிஸ்ரா) கண்டதும் காதல் கொள்கிறார். தன்னுடைய தோழிக்கு உதவி செய்ய போய், தன் காதலுக்குச் சிக்கலை ஏற்படுத்திக் கொள்கிறார். அவருடைய காதலைச் சேர்த்து வைக்க ஒரு புறம் நண்பர்கள், இன்னொருபுறம் குடும்பத்தினர் என களமிறங்குகிறார்கள். இந்த முயற்சி ‘சுபம்’ ஆனதா, இல்லையா என்பதே கதை.

பார்த்துப் பழகிய காதல் கதைதான் என்றாலும் அதற்கு நகைச்சுவை முலாம் பூசி படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பொய், அதை மறைக்க இன்னொரு பொய் என பொய் மூட்டைகள் சேரும் போது கடைசியில் என்ன நடக்கும் என்பதைத் திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். ஆனால், அந்தக் காட்சிகள் ஒரு கட்டத்தில் மிகையாகி சோர்வை ஏற்படுத்தி விடுகின்றன.

சில இடங்களில் காட்சிகள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. தொடர்ந்து ஒன்றைப் போலவே வரும் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. ஆஸ்கர் விருது வாங்கப்போவது போல கனவுடன் எழும் நாயகன், காதலில் விழுந்த பிறகு அவருடைய தொழிலான இயக்குநர் ஆகும் கனவையே மறந்து விடுகிறார். படத்தில் வரும் ட்விஸ்ட்களில் ஒரு சில மட்டுமே ரசிக்க வைக்கின்றன.

காதலிக்கும் பெண்ணை குடும்பத்தினர் தவறாக நினைப்பது போன்ற பல காட்சிகள், ஏற்கெனவே பார்த்த படங்களையே நினைவூட்டுகின்றன. எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும் நாயகனின் தந்தை அழகம் பெருமாள், கிளைமாக்ஸில் மகனுக்காக நாடகத்தில் பங்கேற்பது நெருடல். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நீளம் கொண்ட படம்தான் என்றாலும் கதையோடு ஒன்றுவதற்கான காட்சிகளை இன்னும் புதிதாக யோசித்திருக்கலாம்.

நாயகனாக அசோக் செல்வன். ரொமான்டிக் காதலர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். காதலியைச் சுற்றி வருவது, காதலியிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிப்பது என நெருடல் இல்லாமல் நடித்திருக்கிறார். நாயகி அவந்திகா மிஸ்ரா, எமோஷனல் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். கோபக்கார அப்பாவாக அழகம் பெருமாளின் நடிப்பில் குறையில்லை. ரகளை செய்யும் அம்மாவாக ஊர்வசி சிரிக்க வைக்கிறார். நாயகனின் நண்பர்களாக வரும் பக்ஸ், விஜய் வரதராஜ் சிரிக்க வைக்க படாதபாடுபடுகிறார்கள். சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் பதிகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

நிவாஸ் கே. பிரசன்னாவின் பின்னணி இசை கவர்கிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும், ஜெரோம் ஆலனின் படத்தொகுப்பும் படத்துக்கு இன்னும் உதவி இருக்கலாம் என்றாலும் ரசிக்கலாம்.

SCROLL FOR NEXT