சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வரும் நவம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
படத்தின் முதல் சிங்கிளான ‘தினம் தினமும்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வரும் நவம்பர் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முந்தைய பாகத்தில் சூரி நடித்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்தும் அளித்த நிலையில், இந்தப் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான திரை நேரம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.