சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை ‘பாகுபலி’யுடன் ஒப்பிட்டு தமிழ் சினிமாவின் நேர்த்தியான படைப்பு என இயக்குநர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் ‘கங்குவா’ படத்தை பார்த்தேன். தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது. எப்படி தெலுங்கில் ‘பாகுபலி’ பிரம்மாண்டமான திரைப்படமோ அதேபோல தமிழில் ‘கங்குவா’. எதற்கு இந்தப் படம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ள இயக்குநர் சிவாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். சூர்யாவின் நடிப்பு, உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது. கேமரா, சிஜி என அனைத்தும் உலகத்தரத்துக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள். காலம் தாழ்த்தி இந்தப் படத்தை கொண்டாடி விடாதீர்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை திரையரங்குகளில் பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்” என தெரிவித்துள்ளார்.