தமிழ் சினிமா

சீனாவில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 

செய்திப்பிரிவு

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சீன மொழி போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மகாராஜா’. அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்து இந்தப் படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்தார். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்ததுடன் உலக அளவில் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் சீனாவில் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருப்பதாக படத்தின் இயக்குநர் நிதிலன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பான சீன மொழியில் வெளியாகியுள்ள போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தப் படம் விஜய் சேதுபதியின் 50-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT